குடும்ப தகராறில் மனைவி, மாமியாரை கோடரியால் வெட்டிக்கொன்ற வாலிபர்.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!

 

கேரளாவில் குடும்ப தகராறில் மனைவி மற்றும் மாமியாரை வாலிபர் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வளஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது. இவரது மனைவி செல்மா (30). இவர்களது மகன் பஹத் (12). சாகுல் ஹமீது மற்றும் அவரது மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தனது கணவரிடம் கோபித்துக்கொண்டு, கண்ணூர் மாவட்ட்ம முழக்குன்னு அருகே காக்காயங்காடு பகுதியில் உள்ள தாய் அலிமா (53) வீட்டுக்கு சென்றுவிட்டார். தன்னுடன் மகன் பஹத்தையும் அழைத்துச் சென்றார்.

இந்த நிலையில் செல்மாவின் தாய் வீட்டுக்கு சாகுல் ஹமீது சென்றார். அங்கு மனைவி மற்றும் மாமியாருடன் தகராறு செய்து இருக்கிறார். அப்போது ஆத்திரமடைந்த அவர் மனைவி மற்றும் மாமியாரை கோடரியால் வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அப்போது தனது மகனையும் சாகுல்ஹமீது தாக்கியிருக்கிறார். பின்பு அவர் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். இந்த பயங்கர சம்பவம் குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செல்மா மற்றும் அவரது தாய் அலிமா ஆகிய இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பரியாரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தாக்குதலில் காயமடைந்த சிறுவன் பஹத்தை மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். குடும்ப தகராறு காரணமாக மனைவி மற்றும் மாமியாரை சாகுல்ஹ மீது வெட்டிக் கொன்றிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தப்பியோடி விட்ட அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.