முட்டை குழம்பு சமைக்க மறுத்த காதலியை கொன்ற கொடூர காதலன்.. அரியானாவில் பயங்கரம்!

 

அரியானாவில் முட்டை குழம்பு சமைக்க மறுத்தால் காதலியை, காதலன் சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

அரியானா மாநிலம் குருகிராம் அருகே சௌமா கிராமத்தில் வசித்து வருபவர் லல்லன் யாதவ் (35). இவர் அதே பகுதியைச் சேர்ந்த அஞ்சலி (32) என்பவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்துள்ளார். இவரது மனைவி இறந்துவிட்டதாக கூறி,  டெல்லியில் இருந்து அரியானாவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. அரியானா வந்த இவர், சுமார் 7 மாதங்களுக்கு முன்பு அஞ்சலியை சந்தித்து லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார். 

இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் அஞ்சலி சடலமாக கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அஞ்சலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த வந்தனர். அப்போது, அஞ்சலியின் காதலனிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் சில  அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின. அதன்படி, சம்பவத்தன்று இரவு மதுபோதையில் இருந்த லல்லன் யாதவ், அஞ்சலியிடம் முட்டை குழம்பு கேட்டுள்ளார். அப்போது, முட்டை குழம்பு சமைக்க மறுத்ததால், தனது காதலியிடம் லல்லன் யாதவ்  சண்டை போட்டுள்ளார். 

இதனால் இருவருக்கும் இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதத்தில் அஞ்சலியை, லல்லன் யாதவ்  பெல்ட்டால் கடுமையாக அடித்துள்ளார். அதோடு இல்லாமல், சுத்தியால் கொடூரமாக அடித்து கொலை செய்துள்ளதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். பீகார் மாநிலம் மாதேபுரா மாவட்டத்தில் உள்ள அவுராஹி கிராமத்தைச் சேர்ந்த யாதவ், டெல்லியின் சராய் காலே கான் பகுதியில்  போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைதான லல்லன் யாதவிடம் விசாரணை  நடத்தியதில் இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.