மனைவியின் ரீல்ஸ் மோகத்தால் கணவர் தூக்கிட்டு தற்கொலை.. கர்நாடாகவில் அதிர்ச்சி!

 

கர்நாடகாவில் மனைவியின் வெறித்தனமான இன்ஸ்டா ரீல்ஸ் மோகம், கணவரின் உயிரைப் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் சாமராஜ நகரில் உள்ள ஹனுருயின் பகுதியில் உள்ள மரத்தில் வாலிபரின் உடல் தூக்கில் நேற்று மாலை தொங்கியது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மரத்தில் இருந்து அந்த வாலிபரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். தற்கொலை செய்தவர் யார், எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது தற்கொலை செய்து கொண்டவர் சாமராஜ நகரைச் சேர்ந்த குமார் (34) என்பது தெரிய வந்தது. கூலித் தொழிலாளியான குமார், குடும்பச் சண்டை காரணமாக தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. குமாரின் மனைவி ரீல்ஸ் உருவாக்குவதில் ஆர்வம் அதிகம் உள்ளவர் என்றும், சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் அடிக்கடி அவர் ரீல்ஸ்களை வெளியிட்டுள்ளார்.

இதன் காரணமாக கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனால், ரீல்ஸ் உருவாக்குவதை குமார் மனைவி கைவிடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த குமார், மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்த குமாரின் சகோதரர் மகாதேவ சுவாமி கூறுகையில், “குமாரின் மனைவி வேறு ஆண்களுடன் சேர்ந்து ரீல்ஸ் தயாரித்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். இதனைப் பார்த்து குமாரின் நண்பர்கள் அவரைக் கேலி செய்துள்ளனர். இதனால் குமாருக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ஆனாம், ரீல்ஸ் தயாரிக்கும் வேலையை குமார் மனைவி விடவில்லை. இதனால் மனம் வெறுத்த நிலையில் குமார் இருந்தார்” என்று கூறினார்.