காதல் கணவனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு.. ஃபேஸ்புக் நேரலையில் பெண் தற்கொலை.. தெலுங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்!
தெலுங்கானாவில் கணவர் வேறு பெண்ணுடன் உறவு வைத்து தன்னை கொடுமைபடுத்துவதாகக் கூறி இளம்பெண் ஒருவர் ஃபேஸ்புக் லைவ்வில் வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தெலுங்கானா மாநிலம் ஐதாரபாத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் சனா கான் (32). இவருக்கு 4 ஆண்டுகளுக்கு முன்னர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹேமந்த் படேல் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. ஹேமந்த்தும் சனாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.
ஹேமந்த்தின் திருமணத்திற்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தனது காதலி சனாவுக்காக வீட்டை விட்டு வெளியேறிய ஹேமந்த் மதம் மாறி சனாவை திருமணம் செய்து கொண்டார். இருவரும் சில காலம் ராஜஸ்தானில் வாழ்ந்த நிலையில், வேலை நிமித்தமாக சனா சில மாதங்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் குடியேறியுள்ளார். இருவருக்கும் 3 வயதில் மகன் உள்ளார்.
இசை கலைஞரான ஹேமந்த் சமீப காலமாகவே வேறு பெண்ணுடன் கள்ள உறவில் இருந்துள்ளார். அந்த பெண் ஹேமந்திடம் இசை வகுப்புக்கு வரும் மாணவி ஆவார். இந்த விவகாரம் மனைவி சனாவிற்கு தெரிய வரவே இருவருக்கும் இடையே கடும் சண்டை ஏற்படத் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து மனைவி சனாவை ஹேமந்த் தொடர்ந்து கொடுமைபடுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை ஜூன் 22-ம் தேதி இரவு சனா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் லைவ் வீடியோ வெளியிட்டார். தனது கணவரின் கொடுமைகளை விவரித்த அவர் வீடியோ லைவ்வாக சென்று கொண்டிருந்த போதே தற்கொலை செய்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ஐதராபாத் நாசாராம் பகுதியில் உள்ள சானாவின் வீட்டில் இருந்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் சனாவின் செல்போன் உள்ளிட்ட ஆதாரங்களை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.