கர்நாடக தேர்தல்.. முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் பசவராஜ் பொம்மை!!

 

கர்நாடகா தேர்தலில் பாஜக தோல்வி அடைந்த நிலையில் முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார்.

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் பதவிக்காலம் வருகிற 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த 10-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஆம் ஆத்மி உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட்டன. 

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டபடி நேற்று காலை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் வெற்றி முகத்தில் உள்ளது. பாஜக 65 இடங்களிலும் மஜதா 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. பெரும்பான்மைக்கு 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் 136 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

அதனையடுத்து, காங்கிரஸ் தொண்டர்கள் மாநிலம் முழுவதும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக கட்சி அலுவலகங்களில் தொண்டர்கள் சோகத்துடன் அமர்ந்திருந்தனர். காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டத் தலைவர்கள் முதல்வரைத் தேர்வு செய்யும் பணிக்கு தீவிர ஆலோனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போதைய கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை அவரது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜ்பவன் அலுவலகத்துக்குச் சென்ற அவர், கர்நாடகா ஆளுநர் தாவர் சந்த் கெல்லாட்டிடம் ராஜினாமா கடித்ததை அளித்தார். இது குறித்து தெரிவித்த அவர், ‘என்னுடைய ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்துள்ளேன். அது ஏற்றுக்கொள்ளப்பட்டது’ என்று தெரிவித்தார்.