கன்வார் யாத்திரை.. மின்சாரம் தாக்கி 9 பக்தர்கள் பரிதாப பலி.. பீகாரில் சோகம்!

 

பீகாரில் கனவார் யாத்திரை சென்ற பக்தர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநிலங்களில் புகழ் பெற்ற கன்வார் யாத்திரை நடந்து வருகிறது. நேற்று இரவு 11.15 மணியளவில் கன்வார் பக்தர்கள் பீகாரில் சோனாப்பூரில் உள்ள பாபா ஹரிகர்நாத் கோவிலில் ஜலஅபிஷேகம் செய்வதற்காக கார்களில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது வைசாலி மாவட்டத்தில் அந்த யாத்திரை சென்று கொண்டிருந்த போது சுல்தான்பூர் என்ற கிராமத்தில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. அந்த மின்சார கம்பிகள் அங்கு சென்று கொண்டிருந்த ஒரு காரின் மீது விழுந்தன. இதில் அந்த காரில் இருந்த 9 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் தூக்கி வீசப்பட்டனர். 

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த சம்பவம் தொடர்பாக வைசாலி மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பீகாரில் கன்வார் யாத்திரை பக்தர்கள் உயிரிழந்ததற்கு அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார். 

முதற்கட்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவர்கள் கன்வார் யாத்திரைக்கான பிரத்யேக பாதையில் செல்லவில்லை என்றும் காயமடைந்தவர்கள் இருவரும் ஆபத்தான நிலையில் இல்லை என்றும் வைசாலி மாவட்ட மாஜிஸ்திரேட் யஷ்பால் மீனா தெரிவித்துள்ளார்.