50 அடி பள்ளத்திற்குள் பாய்ந்த ஜீப்.. 9 பெண் தொழிலாளர்கள் பலி.. கேரளாவில் சோகம்!

 

கேரளாவில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் சென்ற ஜீப் 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி அருகே உள்ள தலப்புழா பகுதியில் ஏராளமான தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. மலைப்பகுதிகளில் உள்ள இந்த தோட்டங்களில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்கள் வாகனங்களில் அழைத்துச் செல்லப்படுவார்கள். அதேபோன்று தலப்புழா அருகே கண்ணோத் மலையில் கம்பமாலை என்ற பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் தேயிலை பறிக்கும் வேலைக்காக ஏராளமான தொழிலாளர்கள் வாகனங்களில் சென்றிருந்தனர்.

நேற்று மாலை 3.30 மணியளவில் பணி முடிந்த பின்னர் 13 பெண் தொழிலாளர்கள் ஜீப் ஒன்றில் தங்களது வீடுகளுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர். அவர்கள் வந்த ஜீப் கண்ணமலா பகுதியில் கொண்டை ஊசி வளைவில் வந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 50  பள்ளத்தில் பாய்ந்தது. இந்த விபத்தில் ஜீப்பில் பயணம் செய்து அனைவரும் ஜீப்புடன் பள்ளத்தில் விழுந்தனர்.

ஜீப் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் ஜீப்பில் பயணம் செய்து வந்த ராணி (62), கார்த்தி காயினி (64), ஷாஜா (48), ஷோபனா (56), சித்ரா (33), சாந்தா (52), சின்னம்மா (52), ராபியா (60), லீலா (55) ஆகிய 9 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அவர்களில் சாந்தா மற்றும் சித்ரா ஆகிய இருவரும் தாய் - மகள் ஆவர். இந்த கோர விபத்தில் ஜீப்பின் ஓட்டுநரான மானந்தவாடியை சேர்ந்த மணி (44), உமாதேவி (40), ஜெயந்தி (45), லதா (38), மோகனா (44) ஆகிய 5 பேர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் முதலில் மானந்தவாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு மருத்துமவனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 2 பெண் தொழிலாளர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த விபத்து குறித்து மானந்தவாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான 9 பேரின் உடல்களும் மானந்தவாடி அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. அவர்களது உடல்கள் இன்று பிரேத பரரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.