கல்யாணத்துக்கு நேரமாச்சு... மணமகள் வீட்டிற்கு 28 கி.மீ தூரம் நடந்தே சென்ற மணமகன்! தீயாய் பரவம் வீடியோ

 

ஒடிசாவில் ஓட்டுநர்களின் வேலை நிறுத்தம் காரணமாக, மணமகன் குடும்பத்தினர் சுமார் 28 கிலோமீட்டர் தூரம் நடந்தே சென்ற விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஒடிசா மாநிலம் ரயஹடா மாவட்டம் பருதிபேடு கிராமத்தில் வசித்து வருபவர் இளைஞர் நரேஷ் பிஸ்கா. இவருக்கும் அதே மாவட்டத்தை சேர்ந்த டிபல்படு கிராமத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை நரேஷுக்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. 

திருமணத்திற்காக 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மணமகளின் வீட்டிற்கு செல்ல நரேஷின் குடும்பத்தினர் புறப்பட்டனர். இதற்காக 2 வேன்களை வாடகைக்கு புக் செய்தனர். ஆனால், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒடிசா முழுவதும் வாடகை கார், வேன் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மணமகன் நரேஷ் தனது திருமணத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. 

ஆனாலும், தனது திருமணத்திற்கு பல்வேறு தடைகள் வந்தபோதும் மனம் தளராத மணமகன் நரேஷ் மணமகளின் வீட்டிற்கு நடந்தே செல்ல முடிவு செய்தார். 28 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மணமகளின் வீட்டிற்கு நரேஷ் நடந்தே சென்றார். அவருடன் குடும்ப உறுப்பினர்கள் 30 பேர் நடந்து சென்றனர். 

வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு தனது பயணத்தை தொடங்கிய மணமகன் நரேஷ் 28 கிலோமீட்டர் நடந்து சென்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு மணமகளின் வீட்டை வெற்றிகரமாக அடைந்தார். இந்த பயணத்திற்கு பின் வெள்ளிக்கிழமை காலை நரேஷுக்கு மணமகளுடன் திருமணம் நடைபெற்றது.