வாட்டி வதைக்கும் குளிர்.. இந்த 2 மாநிலங்களில் வரும் 14-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

 

கடம் குளிர் காரணமாக டெல்லி மற்றும் பஞ்சாபில் வரும் 14-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வட இந்தியாவில் கடந்த சில நாட்களாக குளிர் வாட்டி வதைக்கிறது. வெப்பநிலை இயல்பைவிட குறைந்துள்ள நிலையில், சாலை முழுவதும் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. நடுங்க வைக்கும் குளிரில் இருந்து தங்களை காத்துக்கொள்ள மக்கள் சாலைகளில் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர். மேலும் பனிமூட்டம் காரணமாக பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், “பஞ்சாப், அரியானா, டெல்லி, சத்தீஸ்கர், ராஜஸ்தான் பகுதிகளில் நிலவி வரும் குளிரானது கடுமையான குளிராக மாறி அடுத்த 2 நாட்களுக்கு இதே நிலை தொடரும். பின்னர் படிப்படியாக குறையும்” எனத் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் நிலவி வரும் கடும் குளிர் காரணமாக அந்த மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை முதல் வரும் 14-ம் தேதி வரை விடுமுறை அறிவித்து அம்மாநில முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோல் டெல்லியில் குளிர் வாட்டி வதைக்கும் நிலையில் நர்சரி முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அடுத்த 5 நாட்களுக்கு மூடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அதிஷி அறிவித்துள்ளார்.