இன்ஸ்டா ரீல்.. நடுரோட்டில் துப்பாக்கியுடன் இளம்பெண் ஆட்டம்.. வைரலான வீடியோ

 

உத்தர பிரதேசத்தில் நடுரோட்டில் கையில் துப்பாக்கியுடன் இளம்பெண் நடனம் ஆடி வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் இணையதளத்தில் ரீல்ஸ் மோகத்தில் இளைஞர்கள் மூழ்கி இருக்கின்றனர். காவல் நிலையம், ரயில் நிலையம், ரயில்களில் முன்பு மற்றும் பேருந்துகளை நிறுத்தி ரீல்ஸ் எடுக்கும் கலாச்சாரம் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதீத ஆர்வம் காரணமாக சிலர் உயிரைப் பணயம் வைத்து விதவிதமான ஸ்டண்டுகளை செய்து வீடியோ எடுக்கின்றனர். திறமையை காட்டுவதாக கூறி செய்யும் இத்தகைய ஸ்டண்டுகள் சில சமயம் மரணத்தில் முடிகின்றன.

இந்த நிலையில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோ நகரில் உள்ள நெடுஞ்சாலையில் சிம்ரன் யாதவ் என்ற இளம்பெண் போஜ்புரி பட பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடினார்.  இன்ஸ்டாகிராமில் பிரபல நபரான அவர், தன்னை லக்னோவின் ராணி என குறிப்பிடுகிறார்.  இவரை 20 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.  இந்நிலையில், நடுரோட்டில் கையில் துப்பாக்கியுடன் பாட்டுக்கு அவர் நடனம் ஆடியது சர்ச்சையை ஏற்படுத்தியது.  

இதுகுறித்து வழக்கறிஞர் கல்யாண்ஜி சவுத்ரி என்பவர் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ 22 வினாடிகள் ஓடுகிறது. அதன் தலைப்பில், சிம்ரன் விதிகளை காற்றில் பறக்க விட்டு விட்டார். துப்பாக்கியுடன் நெடுஞ்சாலையில் வீடியோ எடுத்து வெளியிட்டு இருக்கிறார் என கல்யாண்ஜி பதிவிட்டு உள்ளார். இதனை தொடர்ந்து, உத்தர பிரதேச போலீசார், இந்த விவகாரம் பற்றி விசாரிக்கவும் என லக்னோ போலீசாருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.