ரீல்ஸ் எடுக்கச்சென்று 300 அடி பள்ளத்தாக்கில் தவறி விழுந்த இன்ஸ்டா பிரபலம்.. மகாராஷ்டிராவில் சோகம்!

 

மகாராஷ்டிராவில் உள்ள கும்பே நீர்வீழ்ச்சியில் ரீல்ஸ் வீடியோ எடுத்த இளம்பெண் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய காலகட்டத்தில் இணையதளத்தில் ரீல்ஸ் மோகத்தில் இளைஞர்கள் மூழ்கி இருக்கின்றனர். காவல் நிலையம், ரயில் நிலையம், ரயில்களில் முன்பு மற்றும் பேருந்துகளை நிறுத்தி ரீல்ஸ் எடுக்கும் கலாச்சாரம் இந்தியாவில் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதீத ஆர்வம் காரணமாக சிலர் உயிரைப் பணயம் வைத்து விதவிதமான ரீல்ஸ் செய்து வீடியோ எடுக்கின்றனர். திறமையை காட்டுவதாக கூறி செய்யும் இத்தகைய ரீல்ஸ்கள் சில சமயம் மரணத்தில் முடிகின்றன.

அந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள கும்பே நீர்வீழ்ச்சிக்கு ஆன்வி கம்தார் (27) என்ற இளம்பெண் ஒருவர், அவரது நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தார். அப்போது நீர்வீழ்ச்சியின் அருகே அவர் ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது 300 அடி பள்ளத்தில் தவறி விழுந்தார். போட்டோக்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோ எடுத்துக் கொண்டிருக்கும் போது திடீரென அவர் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர், ஆறு மணி நேர மீட்புப் பணியைத் தொடர்ந்து ஆன்வி கம்தார் பள்ளத்தாக்கில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டார். இருந்தபோதும் தவறி விழுந்ததில் பலத்த காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.