மகாராஷ்டிராவில் இன்ஸ்டா பிரபலம் மீது கொலை முயற்சி.. காதலன் வெறிச்செயல்!

 

மகாராஷ்டிராவில் அரசு அதிகாரியின் மகன், தனது காதலியை கார் ஏற்றி கொல்ல முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநில சாலை மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராக செயல்பட்டு வருபவர் அனில் கெய்க்வாட். இவரது மகன் அஸ்வஜித் கெய்க்வாட். அஸ்வஜித்தும் பிரியா என்பவரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்தனர். கடந்த திங்கட்கிழமை (டிச.11) அதிகாலை 4 மணியளவில் அஸ்வஜித் தனது குடும்ப விழாவில் கலந்து கொள்ளுமாறு பிரியாவை போனில் அழைத்திருக்கிறார்.

இதையடுத்து காதலன் அழைத்ததால் பிரியாவும் அங்கு சென்றிருக்கிறார். அங்கு சென்ற பிரியா அஸ்வஜித்தின் சில நண்பர்களைச் சந்தித்திருக்கிறார். அஸ்வஜித்தின் நடவடிக்கை சரியில்லாத காரணத்தால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பிரியா அந்த இடத்தில் இருந்து வெளியேறினார்.

காதலனுக்காக வெளியே காத்திருந்த பிரியாவை வெளியே வந்த அஸ்வஜித்தும் அவருடைய நண்பர்களும் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி தொந்தரவு செய்திருக்கின்றனர். இதை தொடர்ந்து அஸ்வஜித் பிரியாவை அடித்து கழுத்தை நெரித்து கீழே தள்ளியிருக்கிறார். பின்னர் அஸ்வஜித், டிரைவரின் உதவியுடன் பிரியா மீது காரை மோதி இருக்கிறார். இதனால் படுகாயம் அடைந்த பிரியா சாலையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

விபத்து நடந்து அரை மணி நேரத்திற்கு பிறகு அவ்வழியே சென்ற ஒருவர் காயமடைந்த பிரியாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியா சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் பிரியாவிடம் சம்பவம் பற்றி கேட்டு அறிந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து அஸ்வஜித் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை அஸ்வஜித்தை போலீசார் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.