உலகிலே முதல்முறையாக அசைவத்தை தடை செய்த இந்திய நகரம்.. தடையின் பின்னணி என்ன?
குஜராத்தில் உள்ள பாலிதானா நகரத்தில் அசைவ உணவுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் பல்வேறு மதத்தினர் வசித்து வரும் நிலையில் பொதுவாக அனைத்து நகரங்களிலுமே சைவ, அசைவ உணவுகள் என்பது பொதுவானதாக இருந்து வருகிறது. ஆனால் சைவ உணவு சாப்பிடுபவர்கள் இடையே அசைவ உணவுகள் குறித்த ஒவ்வாமை பல காலமாகவே இருந்து வருகிறது. இந்த சூழலில்தான் குஜராத்தில் உள்ள பாலிதானா நகரத்தில் அசைவம் தடை செய்யப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் பாலிதானா நகரம் ஜெயின் சமூகத்தை சேர்ந்த மக்கள் அதிகமாக வாழும் பகுதியாக உள்ளது. ஜெயின் சமூகத்தினரை பொறுத்தவரை விலங்குகளை சாப்பிடும் வழக்கம் அவர்களிடம் இல்லை. நிலத்திற்கு அடியில் விளையும் காய்கறிகளை ஜெயின்கள் தங்கள் உணவுகளில் எடுத்துக் கொள்வதில்லை.
பாலிதானாவில் உள்ள 250க்கும் மேற்பட்ட இறைச்சிக் கடைகளை மூடக்கோரி, சுமார் 200 ஜெயின் துறவிகளின் தொடர்ச்சியான எதிர்ப்புகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அகிம்சையை தங்கள் நம்பிக்கையின் மையக் கோட்பாடாகக் கருதும் ஜெயின் சமூகத்தினர், மற்ற உயிர்களை துன்புறுத்தக் கூடாது என்ற நெறிமுறைகளை கடைப்பிடிக்கிறார்கள்.
அதனை தொடர்ந்து தற்போது அசைவம் முற்றிலும் தடை செய்யப்பட்ட உலகின் முதல் நகரமாக பாலிதானா மாறியுள்ளது. அதை தொடர்ந்து குஜராத்தின் வததோரா, ராஜ்கோட், ஜூனாகத் உள்ளிட்ட வேறு சில நகரங்களிலும் இதேபோன்ற விதிமுறைகளை அமல்படுத்த திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மக்களின் உணர்வுகளை மதிக்கவும், பொது இடங்களில் இறைச்சியைப் பார்ப்பதால் சமூகத்தில் ஏற்படும் எதிர்மறையான தாக்கங்களைத் தடுக்கவும் தடை அவசியம் என்ற ஆதரவான குரல்கள் ஒலிக்கின்றன. பாலிதானா மற்றும் குஜராத்தின் பிற நகரங்களில் அசைவ உணவுகளை தடை செய்யும் முடிவு ஒரு வரலாற்று மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.