டெல்லியில் தொடர் மழை.. ரயில் நிலையில் மின்சாரம் தாக்கி பெண் பலி.. ரயில்வே பணியாளர்களின் அலட்சியமே காரணம்

 

டெல்லி ரயில் நிலையம் அருகே தண்ணீர் தேங்கி இருந்த நடைபாதையில் இருந்த மின்கம்பத்தை தொட்ட இளம்பெண், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், தலைநகர் டெல்லியில் சனிக்கிழமை இரவு முதல் பெய்துவரும் தொடர் மழை காரணமாக, டெல்லி ரயில் நிலையத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. கிழக்கு டெல்லி பகுதியின் பிரீத் விஹாரை சேர்ந்த சாக்‌ஷி அகுஜா, சனிக்கிழமை (ஜூன் 24) அதிகாலை 5.30 மணிக்கு, தனது 3 குழந்தைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் டெல்லி ரயில் நிலையத்திற்கு வந்தார். நடைபாதையில், மழைநீர் தேங்கி இருந்த நிலையில், அந்த நீரைத் தாண்டி செல்லும் பொருட்டு, அருகிலிருந்த மின்கம்பத்தைத் தொட்டு உள்ளார்.

அப்போது திடீரென்று கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்த நிலையில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். இதனையடுத்து பதட்டம் அடைந்த, அவரது குடும்பத்தினர், உடனடியாக, போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மயங்கிக் கிடந்த சாக்‌ஷி அகுஜாவை, அவரது சகோதரி உடன் இணைந்து, லேடி ஹோர்டிங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்து உள்ளனர்.  இந்த சம்பவம், டெல்லி ரயில் நிலையத்தின், வெளியே வரும் முதலாவது வாயிற் பகுதியில் நிகழ்ந்து உள்ளதாக, போலீசார் தெரிவித்து உள்ளனர்.  

சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலட்சியத்தாலேயே, தனது சகோதரி உயிரிழந்து உள்ளதாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரி மாதவி சோப்ரா போலீசில் புகார் அளித்து உள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். சாக்‌ஷி அகுஜாவின் தந்தை லோகேஷ் குமார் சோப்ரா, தனது மகளின் மரணத்திற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று குற்றம் சாட்டி உள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, “நாங்கள் சண்டிகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தோம், என் மகள் சாக்‌ஷி அகுஜா மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகத் தகவல் கிடைத்ததும் நான் வாகனம் நிறுத்துமிடத்திலிருந்த தாங்கள், சம்பவ இடத்திற்கு வந்ததாக” அவர் குறிப்பிட்டு உள்ளார். அங்குப் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது,  மின்கம்பத்தில் மின்சார கம்பிகள் திறந்த நிலையில் இருப்பது தெரியவந்து உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, ரயில்வே போலீசார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.