அண்ணன் மரணத்திற்கு நீதி வேண்டும்.. மோடி அரசுக்கு வாக்களித்த விரலை வெட்டி உள்துறை அமைச்சருக்கு அனுப்பிய வாலிபர்!

 

மகாராஷ்டிராவில் மோடி அரசுக்கு வாக்களித்த விரலை வெட்டி உள்துறை அமைருச்சருக்கு அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் உல்ஹாஸ் நகரில் நந்தகுமார் நானாவரே என்பவர் முகாம் எண்.4ல் உள்ள அஷாலேபாடா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நந்தகுமார் கடந்த 20 நாட்களுக்கு முன் தனது மனைவியுடன் வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். நந்தகுமார் நானாவரே தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தனது மொபைல் போனில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில், சதாரா மாவட்டம் பால்தான் தாலுகாவைச் சேர்ந்த சங்ராம் நிகால்ஜே, ரஞ்சித்சிங் நாயக் நிம்பல்கர், வழக்கறிஞர் தியானேஷ்வர் தேஷ்முக், நிதின் தேஷ்முக் ஆகியோரால் தான் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறி இருந்தார். இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்க கோரி நந்தகுமாரின் சகோதரர் தனஞ்சய் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து வருகிறார்.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படாததால் ஆத்திரமடைந்த நந்தகுமாரின் சகோதரர் தனஞ்சய், தனது ஒரு விரலை வெட்டி அதை வீடியோ எடுத்து மாநில உள்துறை அமைச்சருக்கு அனுப்பி உள்ளார். மேலும் மோடி அரசுக்கு வாக்களித்த விரலை வெட்டி உள்துறை அமைச்சர் தேவேந்திர பட்னாவிசுக்கு பரிசாக அனுப்புவதாக வீடியோவில் தனஞ்சய் கூறி உள்ளார்.

இந்த விவகாரத்தில் அமைச்சருக்கு ஒருவருக்கு தொடர்பு இருப்பதால் விசாரணை மந்தமாக நடப்பதாக தனஞ்சய் குற்றம் சாட்டி உள்ளார். தனது அண்ணன் மரணத்திற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வாரந்தோறும் தனது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் வெட்டி அனுப்பி வைப்பதாக அவர் வீடியோவில் கூறி உள்ளார்.