மாப்பிள்ளை பிடிக்கலை.. கிணற்றில் குதித்த தங்கை.. காப்பாற்ற சென்ற அண்ணனும் உயிரிழந்த சோகம்!

 

கர்நாடகாவில் மன உளைச்சலில் இருந்த தங்கை கிணற்றில் குதித்த நிலையில் காப்பாற்ற சென்ற அண்ணனும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் கலபுரகி மாவட்டம் படபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்தீப் (23). இவரது தங்கை நந்தினி (19). இவருக்கு திருமணம் செய்வதற்காக குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். இந்த நிலையில் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை நந்தினிக்கு பிடிக்கவில்லை. இதனால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்த மாப்பிள்ளையைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று நந்தினியின் குடும்பத்தினர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலில் இருந்த நந்தினி, தற்கொலை செய்வதற்காக நேற்று மாலை திடீரென கிணற்றில் குதித்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நந்தினியின் சகோதரர் சந்தீப், தங்கையைக் காப்பாற்றுவதற்காக கிணற்றில் குதித்துத்துள்ளார். ஆனால், இருவருக்கும் நீச்சல் தெரியாததால் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த கிராமத்தினர் விரைந்து வந்து சந்தீப், நந்தினி உடல்களை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணன், தங்கை உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.