நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அளவு என்னிடம் பணம் இல்லை.. ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

 

மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு என்னிடம் பணம் இல்லை என ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருப்பது பேசுபொருளாக மாறியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றே அறிவிக்கப்பட உள்ளது. தேர்தல்  தேதி அறிவிக்கப்பட்டது முதல்  தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது. பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இத்தேர்தலில் மாநிலங்களவை எம்.பி.க்களாக இருக்கும் ஒன்றிய அமைச்சர்கள் சிலரை வேட்பாளர்களாக பாஜக களம் இறக்கி உள்ளது.

அந்த வகையில், மாநிலங்களவை உறுப்பினர்களான ஒன்றிய அமைச்சர்கள் பியூஷ் கோயல், பூபேந்திர யாதவ், ராஜீவ் சந்திரசேகர், மன்சுக் மாண்டவியா, எல்.முருகன், ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர். ஆனால், கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இத்தேர்தலில் போட்டியிடவில்லை. தேர்தலில் போட்டியிடுவார் என அரசியல் வட்டாரங்களும், மக்களும் எதிர்பார்த்த நிலையில், பாஜக தலைமை அவரை வேட்பாளராக அறிவிக்கவில்லை.

இந்நிலையில், டெல்லியில் நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அப்போது பேசிய அவர்,  “மக்களவைத் தேர்தலில் ஆந்திரா அல்லது தமிழ்நாட்டில் போட்டியிட பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா எனக்கு வாய்ப்பளித்தார். 10 நாட்கள் யோசித்த பிறகு என்னால் தேர்தலில் போட்டியிட இயலாது என்ற பதிலைத் தெரிவித்தேன்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அளவு என்னிடம் பணமில்லை. ஆந்திராவில் போட்டியிடுவதா அல்லது தமிழ்நாட்டில் போட்டியிடுவதா என்ற பிரச்னையும் எனக்கு இருக்கிறது. மேலும், வெற்றியை தீர்மானிக்கும் அளவுகோல் பற்றியும் கேள்விகள் எழும். நீங்கள் இந்த சமூகத்தைச் சேர்ந்தவரா? இந்த மதத்தைச் சேர்ந்தவரா? இதிலிருந்து வந்தவரா? இவற்றையெல்லாம் யோசித்து, என்னால் தேர்தலில் போட்டியிட இயலாது என்று தெரிவித்தேன். எனது வாதத்தை ஏற்றமைக்காக கட்சித் தலைமைக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.

“நாட்டின் நிதியமைச்சரான உங்களிடம் தேர்தலில் போட்டியிட பணம் இல்லையா?” என்று அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், “இந்தியாவின் ஒட்டுமொத்த பணமும் எனக்கு சொந்தமானது அல்ல. எனது சம்பளம். எனது வருமானம், எனது சேமிப்பு ஆகியவை மட்டுமே எனக்கு சொந்தம்” என்றும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.