காலை உணவு செய்யவில்லை.. பெற்ற தாயை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற சிறுவன்.. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்!

 

கர்நாடகாவில் காலை உணவு தராததால் மகனே தாயை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் முல்பகல் தாலுகா கே.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி சந்திரப்பா. இவரது மனைவி நேத்ரா (40). இந்த தம்பதிக்கு 17 வயதில் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். நேத்ரா ஒயிட்ஃபீல்டில் உள்ள ஒரு டெக்பார்க்கில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று காலை சாப்பாடு தராததால் நேத்ராவின் 17 வயது மகன் அவரை அடித்துக் கொன்றார்.

இந்த சம்பவம் குறித்து கே.ஆர்.புரம் போலீசார் தரப்பில் கூறியதாவது, “கடந்த வியாழக்கிழமை இரவு வழக்கம் போல வீடு திரும்பிய நேத்ராவின் மகன், இரவு உணவு சாப்பிடாமல் தூங்கிவிட்டார். இதனால், உணவை வீணடித்ததற்காக அவரது தாயார் அவரைக் கண்டித்துள்ளார். அதனால் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. 

சிறுவன் இரவு உணவு சாப்பிடாததால், நேற்றுக் காலையில் நேத்ரா உணவு தயாரிக்க விரும்பாமல் இருந்து இருக்கிறார். விடிந்ததும் எழுந்து பார்த்த நேத்ராவின் மகன் தனக்கு காலை உணவு இல்லாததால் கோபம் அடைந்து இருக்கிறார். இதனால் அவருக்கு கல்லூரிக்குச் செல்ல தாமதம் ஏற்பட்டதால் மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

அப்போது ஆத்திரம் அடைந்த சிறுவன், தனது தாய் நேத்ராவை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த நேத்ரா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அதன் பிறகு சிறுவன் போலீசில் சரண் அடைந்தார்” என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.