களமச்சேரி குண்டுவெடிப்புக்கு நான் தான் காரணம்.. வெளியானது காவல்துறையில் சரணடைந்த நபர் பேசும் வீடியோ

 

களமச்சேரி குண்டுவெடிப்புக்கு நான் தான் காரணம் என்று போலீசில் சரணடைந்த டோமினிக் மார்ட்டின் முன்கூட்டியே பதிவு செய்த வீடியோ வெளியானது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமசேரி பகுதியில் கிறிஸ்தவ மதவழிபாட்டு கூட்டரங்கு இன்று காலை நடைபெற்றது. இதில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் பங்கேற்று மத வழிபாடு செய்தனர். இந்த நிலையில், மத வழிபாட்டு கூட்டம் நடந்த அரங்கில் காலை 9.30 மணியளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டுவெடித்தது. 

கூட்ட அரங்கின் மையப்பகுதி மற்றும் அரங்கின் இரு வாயில் பகுதிகளிலும் அடுத்தடுத்து பயங்கர சத்தத்துடன் 3 முறை குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் இருவர் உயிரிழந்தார். மேலும்,56 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக டோமினிக் மார்ட்டின் என்பவர் போலீசில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில், டோமினிக் மார்ட்டின், போலீசில் சரண் அடைவதற்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோ வெளியாகி உள்ளது. அதில், கேரளா, களமச்சேரி குண்டுவெடிப்புக்கு நான் தான் காரணம்.சபையின் செயல்பாடு தனக்கு பிடிக்கவில்லை என்பதால் கடந்த, 4 ஆண்டுகளாக சபையின் கூட்டங்களுக்கு செல்வதில்லை எனக் கூறியுள்ளார்.