குடிசை பகுதி டூ சர்வதேச மாடல்... மும்பையை மிரளவிட்ட தாராவி சிறுமி!!

 

தாராவி பகுதியில் இருந்து சர்வதேச மாடலாக மாறியுள்ள 14 வயது சிறுமி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார்.

குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளில் கார்வா சமுதாய மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு உள்ளனர். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சிறுமி மலீஷா கார்வாவின் குடும்பம் குஜராத்தில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் தாராவி குடிசைப் பகுதிக்கு இடம் பெயர்ந்தது.

கழிப்பறை இல்லாத குடிசை வீட்டில் தாய், தந்தை, தம்பியுடன் வாழ்ந்து வந்த மலீஷாவின் வாழ்வில் கடந்த 2020-ம் ஆண்டில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. ஹாலிவுட் திரையுலகின் பிரபல நடிகர் ராபர்ட் ஹாப்மேன் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் இசை ஆல்பத்துக்காக மும்பை வந்தார். கொரோனா பெருந்தொற்று காரணமாக விமான சேவை முடங்கியதால் அவர் நீண்ட காலம் மும்பையில் தங்க நேர்ந்தது.

அப்போது மும்பை தாராவி குடிசைப் பகுதியில் 12 வயதான சிறுமி மலீஷாவை, நடிகர் ராபர்ட் ஹாப்மேன் சந்தித்தார். அந்த சிறுமியின் சரளமான ஆங்கில பேச்சு, துணிச்சல், நடன ஆர்வம் ஆகியவை ஹாப்மேனை கவர்ந்தது. அதோடு சிறுமியின் ஏழ்மை அவரது மனதை வெகுவாகப் பாதித்தது.

இணையதளம் வாயிலாக சிறுமிக்கு ரூ.15 லட்சம் நிதி திரட்ட ஹாப்மேன் முயற்சி செய்தார். இந்த முயற்சியில் இதுவரை ரூ.10.77 லட்சம் நிதி திரட்டப்பட்டு உள்ளது. மேலும் சிறுமியின் பெயரில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள கணக்குகளை தொடங்கி, அவரின் நடன ஆர்வத்தை ஹாப்மேன் ஊக்குவித்தார்.

இதன் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு முதல் மலீஷா சமூக வலைதளங்களின் முக்கிய பிரபலமாக மாறினார். ‘குடிசை இளவரசி’ என்ற அடைமொழியுடன் இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் பலரின் கவனத்தை ஈர்த்தார். தி பீக்காக், காஸ்மோபாலிட்டன் இந்தியா ஆகிய முன்னணி இதழ்களில் மலீஷாவின் புகைப்படங்கள் பிரதானமாக பிரசுரிக்கப்பட்டன. ஒரு குறும்படத்திலும் அவர் திறமையாக நடித்தார். இதன்பலனாக அண்மையில் 2 ஹாலிவுட் படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

A post shared by @forestessentials

தற்போது டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘பாரஸ்ட் எசென்ஷியல்ஸ்’ என்ற முன்னணி அழகு சாதன தயாரிப்பு நிறுவனத்தின் விளம்பர தூதராக மலீஷா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிறுவனத்துக்கு இந்தியாவில் 115 பிரம்மாண்ட ஷோரூம்கள் உள்ளன. நட்சத்திர ஓட்டல்கள் உட்பட 190 பெரிய ஓட்டல்களுக்கு அந்த நிறுவன தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதோடு 120 நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.

சர்வதேச அளவில் பிரபலமான பாரஸ்ட் எசென்ஷியல்ஸின் விளம்பர தூதராக மலீஷா நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் அவர் சூப்பர் மாடலாக உருவெடுத்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மும்பையில் உள்ள அந்த நிறுவன ஷோரூமுக்கு மலீஷா அண்மையில் மிக எளிமையான உடையில் சென்று பார்வையிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.