மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக் கொணற கணவன்.. கர்நாடகாவில் அதிர்ச்சி சம்பவம்

 

கர்நாடகாவில் மதுபோதையில் மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கணவனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு கோட்டிகெரேபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸன். இவரது மனைவி ஜெயலட்சுமி. இந்த தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சோம்புரா தொழிற்பேட்டை ஒன்று ஸ்ரீநிவாஸன் நிலத்தை கையகப்படுத்தியதற்காக அவருக்கு 1.1 கோடி ரூபாய் நஷ்ட ஈடாகக் கொடுத்துள்ளது. இப்பணம் வந்ததில் இருந்து ஸ்ரீநிவாஸனிடம் மாற்றம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இந்தப் பணத்தை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கு பணத்தை கடன் கொடுத்தது மட்டுமல்லாமல், மது அருந்தும் பழக்கத்திற்கும் அடிமையாகி உள்ளார் ஸ்ரீநிவாஸன். இதனால் கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. கணவரின் இத்தகைய போக்கு ஜெயலட்சுமிக்கு கவலை அளிக்கவே, தனக்கு குடும்பத்தினரிடத்தில் 35 லட்ச ரூபாயை சேமிப்பாக இருக்கட்டும் என்று கொடுத்து வைத்திருந்தார்.

சம்பவ தினத்தன்று மது போதையில் வீட்டிற்கு வந்த ஸ்ரீநிவாஸனுக்கும் ஜெயலட்சுமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஸ்ரீநிவாஸன் மனைவியிடம் சேமிப்பாக கொடுத்த 35 லட்சத்தையும் கேட்டுள்ளார். இதில் கணவன், மனைவியிடையே மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த  ஸ்ரீநிவாஸன், மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ளார்.

பிறகு உடலை மறைக்க நினைத்த அவர், ஜெயலட்சுமியின் உடலை தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்துள்ளார். பின் ஏதும் நடவாது போல, அம்மா எங்கே என்று கேட்ட குழந்தைகளிடம் ஜெயலட்சுமி வெளியே சென்றுள்ளார், என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் அன்றிரவு குழந்தைகள் தூங்கியபின் யாருக்கும் தெரியாமல், ஸ்ரீநிவாஸன் தோட்டத்தில் குழி ஒன்றை வெட்ட ஆரம்பித்துள்ளார். இதை பார்த்த குழந்தைகள் அவரிடம், கேள்வி கேட்கவும், காலையில் தென்னங்கன்று நடவு செய்யவேண்டும் என்பதற்காக குழி வெட்டுவதாக குழந்தைகளிடம் சமாளித்துள்ளார்.

மறுநாள் காலையில் அவரது மகள் தண்ணீர் தொட்டியின் அருகில் செல்கையில், அங்கு ஜெயலெட்சுமியின் கால்கள் தெரிந்துள்ளது. பதறியடித்த அவரது பெண், ஸ்ரீநிவாஸனிடம், அம்மாவின் கால்கள் தண்ணீர் தொட்டியில் தெரிவதாக கூறவும், சுதாரித்துக்கொண்ட ஸ்ரீநிவாஸன், அது நாயின் கால்களாக இருக்கும் என்று மழுப்பி விட்டார். இருப்பினும் இச்சம்பவம் குறித்து குழந்தைகள் அவரது தாய்மாமனான ராஜேஷிடம் தகவல் தெரிவித்தனர்.

பிறகு அங்கு வந்த ராஜேஷ், அக்கம்பக்கத்தினரின் உதவியுடன், தண்ணீர் தொட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஜெயலட்சுமியின் உடலை கைப்பற்றி போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதில் முதலில் குற்றத்தை ஒப்புக்கொள்ள மறுத்த ஸ்ரீநிவாஸன் பிறகு போலிசாரின் விசாரணையில் நடந்ததை விவரித்தார்.