குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000 திட்டம் தொடக்கம்.. இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

 

கர்நாடகாவில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் கிரகலட்சுமி திட்டம் இன்று தொடங்குகிறது.

கர்நாடகா மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு புதிதாக பதவியேற்றுள்ளது. அதில் கிரக ஜோதி என்னும் இலவச 200 அலகு மின்சார திட்டம், கிரகலட்சுமி என்னும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் திட்டம் உள்ளிட்டவை அடங்கும்.

அந்த வகையில் கிரக ஜோதி திட்டம் கடந்த 1ம் தேதி தொடங்கிய நிலையில் கிரகலட்சுமி திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தின் போது அரசு அளித்திருந்த முக்கிய ஐந்து இலவச திட்டங்கள் அனைத்தும் பதவியேற்றது முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கர்நாடக மாநில அரசின் சார்பில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 வழங்கும் கிரகலட்சுமி திட்ட துவக்க விழா இன்று மைசூரில் நடைபெறுகிறது. பிபிஎல் ,ஏபிஎல், ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,000 நிதி உதவி பெறும் கிரகலட்சுமி திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

குடும்பத்தில் யாராவது வருமான வரி, ஜிஎஸ்டி கட்டுபவர்கள் இருந்தால் அவர்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தேர்தல் வாக்குறுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை வயநாடு எம்பி ராகுல் காந்தி இன்று  தொடங்கி வைக்கிறார். இத்திட்டத்தின் மூலம் 1.30 கோடி பெண்கள் பயன் பெற உள்ளனர்.