மத நிகழ்ச்சியில் கடும் நெரிசல்.. குழந்தைகள் உள்பட 116 பேர் பலி.. உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!

 

உத்தர பிரதேசத்தில் மத வழிபாட்டு கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள் உட்பட 116 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலேபாபா என்பவர் ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். இன்று அவரது ஆசிரமத்தில் சத்சங்கம் எனப்படும் வழிபாட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து மக்கள் புறப்பட்டபோது கடும் நெரிசல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் முண்டியடித்து சென்றபோது பலர் கீழே விழுந்தனர்.

கூட்டம் சற்றே கலைந்தபோது ஏராளமானோர் மயங்கிய நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை சோதித்த போது, அவர்களில் பலர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதுவரை 3 குழந்தைகள், ஒரு ஆண்கள் மற்றும் 23 பெண்கள் உட்பட 27 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் ஏராளமானோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பலர் உயிரிழந்தனர். இதனால் இன்று மாலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 116  ஆக உயர்ந்தது. மேலும் சிலருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.