ஒடிசாவில் கனமழை.. மின்னல் தாக்கி 10 பேர் உடல் கருகி பலி.. 3 பேர் காயம்

 

ஒடிசாவில் மின்னல் தாக்கி 10க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் புயல் மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் விடாது பலத்த மழை கொட்டி வருகிறது.

ஒடிசாவின் இரட்டை நகரங்களான புவனேஸ்வர் மற்றும் கட்டாக் உள்பட கடலோரப் பகுதியில் மின்னல் தாக்குதலுடன் கனமழை பெய்து வருகிறது. நேற்று (செப். 2) மதியம் 90 நிமிட இடைவெளியில் முறையே 126 மில்லி மீட்டர் மற்றும் 95.8 மில்லி மீட்டர் அளவில் மழை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், ஒடிசாவின் 6 மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்ததில் மின்னல் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்தனர். இதில், குர்தா மாவட்டத்தில் 4 பேரும், போலங்கிரில் 2 பேரும், அங்குல், பௌத், ஜகத்சிங்பூர் மற்றும் தென்கனல் ஆகிய இடங்களில் தலா ஒருவரும் உயிரிழந்ததாக சிறப்பு நிவாரண ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும் இதைத் தவிர, குர்தாவில் 3 பேர் மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மீட்பு படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதுகுறித்து ஒடிசா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


அதில், “வங்காள விரிகுடாவின் வடக்கே மற்றொரு புயல் உருவாக வாய்ப்புள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அடுத்த மூன்று முதல் நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடையுமாறு” தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டு உள்ளது.