தெலுங்கானாவில் கனமழை.. சுவர் இடிந்து விழுந்த விபத்தில் குழந்தை உள்பட 7 பேர் பலி!

 

தெலுங்கானாவில் நேற்று பெய்த கனமழையால் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பச்சுப்பள்ளி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமான பணியில் உள்ளூர் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிலும் கடந்த 2 நாட்களுக்கு முன் 40 அடி உயரத்திற்கு தடுப்புச்சுவர் கட்டப்பட்டுள்ளது. அந்த தடுப்புச்சுவர் அருகே வடமாநில கட்டிட தொழிலாளர்கள் குடிசை அமைத்து குடும்பத்துடன் தங்கியுள்ளனர். 

இந்த நிலையில், தெலுங்கானாவில் நேற்று இரவு  8.30 மணியளவில் கனமழை பெய்தது. கனமழை காரணமாக அந்த தடுப்புச்சுவர் அருகே மழை நீர் தேங்கியுள்ளது. புதிதாக கட்டப்பட்டு வரும் குடியிருப்பில் இருந்து மழைநீர் வேளியே செல்ல வழி எதுவும் அமைக்கப்படாததால் தண்ணீர் முழுவதும் தடுப்புச்சுவர் அருகே தேங்கியுள்ளது.

அப்போது திடீரென தடுப்புச்சுவர் இடிந்து தொழிலாளர்கள் தங்கி இருந்த குடிசை மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் 4 வயது குழந்தை உள்பட 7 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 

உயிரிழந்தவர்கள் ஒடிசாவை சேர்ந்த ராஜு (25), திருப்பதி (20), சங்கர் (22), குஷி (20), சத்தீஸ்கரை சேர்ந்த ரம்யாதவ் (34), கீதா (30), ஹிமான்ஷு (4) என அடையாளம் காணப்பட்டனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.