குஜராத்தில் தொடர் கனமழை.. 29 பேர் பரிதாப பலி!

 

குஜராத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் 29 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடைவிடாது பெய்து வரும் பேய் மழையால் ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக தேவபூமி துவாரகா மாவட்டத்தில் உள்ள கம்பாலியா தாலுகாவில் 454 மிமீ மழை பெய்துள்ளது. ஜாம்நகரில் 387 மிமீ மழையும், ஜாம்நகரில் உள்ள ஜாம்ஜோத்பூர் தாலுகாவில் 329 மிமீ மழையும் பதிவாகியுள்ளன.

4 நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சூரத், வதோதரா, வல்சட், தபி, நவ்சரி, நர்மதா, பஞ்சமஹாத் ஆகிய மாவட்டங்கள் மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகனப் போக்குவரத்து முடங்கியுள்ளது. மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் ராணுவம், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுக்கள் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வெள்ளம் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளில் சிக்கியுள்ள மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோரங்களில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே மழை, வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் ஏற்கனவே 7 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 22 பேர் பலியாகினர். இதனால் குஜராத்தில் கனமழைக்கு பலியானோரின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வர் பூபேந்திர படேலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாநிலத்தின் நிலைமையை ஆய்வு செய்தார்.

இதுகுறித்து பூபேந்திர படேல் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “பிரதமர் மோடி குஜராத்தில் கனமழை நிலவரம் குறித்து என்னுடன் தொலைபேசியில் உரையாடினார். நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை வழங்கினேன். மக்கள் மற்றும் கால்நடைகளைப் பாதுகாப்பதற்கான வழிகாட்டுதலை பிரதமர் மோடி வழங்கினார். மேலும் மத்திய அரசின் அனைத்து ஆதரவையும், உதவியையும் அவர் உறுதி செய்தார்” என தெரிவித்துள்ளார்.