பலத்த காற்றுடன் கனமழை... கோவில் கொட்டகையின் மீது மரம் விழுந்து 7 பேர் பலி!! மகாராஷ்டிராவில் சோகம்!

 

மகாராஷ்டிராவில் மத வழிபாட்டு தலத்தில் மரம் விழுந்து 7 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மாவட்டம் பரஸ் கிராமத்தில் இந்து மத வழிபாட்டு தலமான பாபுஜி மகாராஜா கோவில் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்தில் மகாஆர்தி நிகழ்ச்சிக்காக நேற்று இரவு 7 மணியளவில் பக்தர்கள் பலர் குவிந்திருந்தனர். இந்த நிகழ்ச்சிக்காக மேற்கூரை போடப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் பக்தர்கள் அனைவரும் அந்த கூரையின் கீழ் நின்றுகொண்டிருந்தனர். 

அப்போது பலத்த காற்று மழை காரணமாக எதிராராத விதிமாக வழிபாட்டு தலத்தில் இருந்த மரம் முறிந்து பக்தர்கள் நின்றுகொண்டிருந்த மேற்கூரை மீது விழுந்தது. இதில், கூரையின் கீழ் நின்றுகொண்டிருந்த பக்தர்கள் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவத்தில் 7 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும், 30 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அகோலாவின் மாவட்ட ஆட்சியர் நிமா அரோரா கூறுகையில், “நேற்று அகோலாவில் உள்ள பாராஸ் என்ற இடத்தில் தகரக் கொட்டகையின் மீது பழமையான மரம் விழுந்தது. அந்த கொட்டகையின் கீழ் இருந்த 40 பேரில் 36 பேர் மருத்துமவனையில் அனுமதிக்கபட்டனர், அவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தனர்” என்றார்.

இது குறித்து துணை முதல்வர் ஃபட்னாவிஸ் தனது ட்விட்டர் பதிவில், “அகோலா மாவட்டத்தில் உள்ள பராஸ் என்ற இடத்தில் மத விழாவிற்கு சிலர் கூடியிருந்தபோது தகர கொட்டகையின் மீது மரம் விழுந்ததில் பக்தர்கள் சிலர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது..

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு மற்றும் முதல்வர் நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி வழங்க முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முடிவு செய்துள்ளார்.