கனமழை எச்சரிக்கை.. இரண்டு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை.. அரசு அறிவிப்பு!

 

கனமழை காரணமாக தெலுங்கானாவில் இன்றும் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், அரியாணா, பஞ்சாப், அசாம், டெல்லி ஆகிய வட மாநிலங்களில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அதன்படி தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத், ரங்கா ரெட்டி, மேட்சல், விகாராபாத், சங்கரெட்டி, மேடக், காமரெட்டி, மெஹபூப்நகர், நாகர்கர்னோல், சித்திபேட், ஜங்கான், ராஜண்ணா சிர்சில்லா மற்றும் கரீம்நகர் ஆகிய இடங்களில் அவ்வப்போது கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நாளை (ஜூலை 27) வரை தெலுங்கானாவில் கனமழை தொடரும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் ஐதராபாத்துக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் தெலுங்கானாவில் அநேக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் இன்றும் (ஜூலை 26) மற்றும் நாளை (ஜூலை 27) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.