வீட்டில் கஞ்சா செடி அறுவடை.. ஃபேஸ்புக் வீடியோவால் சிக்கிய தம்பதி!

 

கர்நாடகாவில் பால்கனியில் வளர்த்த செடியால் தம்பதியை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு பகுதியில் வசித்து வந்த தம்பதியினர், பால்கனியில் தாங்கள் வளர்த்துவந்த அலங்கார செடிகள் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். அதில் ஒரு கஞ்சா செடி இருந்ததை ஃபேஸ்புக் பயணர்கள், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த புகாரின் கீழ் சம்பந்தப்பட்ட தம்பதியான சகர் குருங் (37) மற்றும் ஊர்மிளா குமார் (38) கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சம்பவத்தின்படி பெங்களூருவை சேர்ந்த சகர் குருங் (37) மற்றும் ஊர்மிளா குமார் (38) என்ற தம்பதி, வெகுநாட்களாகவே பால்கனியில் பல அலங்கார செடிகளை வளர்த்து வந்துள்ளனர். அதனை அழகாக புகைப்படம் எடுத்து, ஃபேஸ்புக்கில் பகிர்ந்து வந்துள்ளார் ஊர்மிளா. அப்படித்தான் சம்பவ தினத்தன்றும் பால்கனியின் புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்துள்ளார் ஊர்மிளா. அதைக்கண்ட ஒரு ஃபேஸ்புக் பயணர், அந்த செடிகளுக்கிடையே மறைந்திருந்த கஞ்சா செடியை கண்டுபிடித்து உள்ளார். 

உடனடியாக அதுகுறித்து போலீசாருக்கு தகவலும் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசாரும் விசாரணையை தொடங்கியுள்ளது. இடைப்பட்ட நேரத்தில் ஊர்மிளாவின் உறவினர் ஒருவர், இதுகுறித்து அவருக்கு அலர்ட் கொடுக்கவே.. ஊர்மிளா செடியை தொட்டியில் இருந்து எடுத்து, குப்பைத்தொட்டியில் வீடியுள்ளார். இருந்தபோதிலும் கஞ்சா செடியின் சில இலைகள், அந்த தொட்டியில் அப்படியே இருந்துள்ளன. 

அதையே ஆதாரமாக வைத்து, போலீசார் தீவிர விசாரணையை தொடங்கியுள்ளனர். அதில், தாங்கள் கஞ்சா வளர்த்து வந்ததை அந்த தம்பதி ஒப்புக்கொண்டுள்ளது. தொடர்ந்து அவர்களிடமிருந்து 54 கிராம் வரை கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொபைல் மூலம் வேறு யாருக்கும் கஞ்சா விநியோகம் செய்துள்ளனரா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 

முதலில் ஃபேஸ்புக் பதிவை அவர்கள் மறுத்தபோதிலும், அக்டோபர் 18 அவர்கள் வீடியோ போட்டது போலீஸ் விசாரணையில் உறுதியாகியுள்ளது. NDPS Act-ன் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் காவல்நிலைய பிணையில் அவர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.