பள்ளி பையில் துப்பாக்கி.. 10 வயது மாணவனை துப்பாக்கியால் சுட்ட 5 வயது சிறுவன்.. பீகாரில் பரபரப்பு
பீகாரில் துப்பாக்கியை மறைத்து பள்ளிக்கு எடுத்துச்சென்ற 5 வயது மாணவன் 3ம் வகுப்பு மாணவனை சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சுபால் மாவட்டத்தில் செயின்ட் ஜோன் போர்டிங் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 5 வயது மாணவன் துப்பாக்கியால் சுட்டதால் 10 வயது மாணவனின் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், “நர்சரி பள்ளியில் சிறுவன் ஒருவன், தனது பள்ளி பையில் துப்பாக்கியை மறைத்து வைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளான். அப்போது, அவர் 10 வயது சிறுவனை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் அவனது கையில் காயம் ஏற்பட்டது. சுடப்பட்ட சிறுவன், 3-ம் வகுப்பு படித்து வருகிறான். தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்” என்றார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுவன், படுக்கையில் படுத்தபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளான். அதில், “நான் எனது வகுப்பிற்குச் சென்று கொண்டிருந்தபோது, அவன் தனது பையில் இருந்து துப்பாக்கியை எடுத்து என்னை நோக்கி சுட்டார். நான் அவரைத் தடுக்க முயன்றபோது, அவன் என் கையில் சுட்டுவிட்டான். அந்த பையனுடன் நான் எந்த சண்டையும் போடவில்லை” என்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி முதல்வரை கைது செய்துள்ள போலீசார், இவ்வளவு பெரிய சம்பவம் எப்படி நடந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், துப்பாக்கியால் சுட்ட மாணவர் மற்றும் அவரது தந்தையை தேடி வருகின்றனர்.