இனி ஆண்லைன் பண பரிவர்த்தனைகளுக்கு GST.. கூகுள் பே, போன் பே பயன்படுத்துவர்களுக்கு ஷாக்கிங் தகவல்
இந்தியாவில் இணைய வழி பணப் பரிவர்த்தனைகள் செய்வது அதிகமாகி வருவதால் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி 500 மற்றும் 1,000 ரூபாயை செல்லாது என்று அறிவித்தது. அதன்பிறகு மொத்த பணமும் வங்கியில் செலுத்தப்பட்டது. இந்த நடவடிக்கைக்கு பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரிக்க தொடங்கியது. ரொக்கத்தில் நடைபெற்று வந்த பண பரிவர்த்தனைகள் எல்லாமே டிஜிட்டலுக்கு மாற வேண்டும் என்று முடிவு செய்த ஒன்றிய அரசு, யுபிஐ மூலமும், டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் செய்யும் டிஜிட்டல் பணம் பரிவர்த்தனையை ஊக்குவித்தது.
இந்த நிலையில் சிஎன்பிசி-டிவி18 ஊடகம் வெளியிட்ட தகவலின்படி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் வழியாக ரூ.2,000 வரையிலான சிறிய டிஜிட்டல் பரிவர்த்தனை பேமெண்ட்களுக்கு (பிஏக்கள்) விதிக்கப்படும் 2 சதவீதம் சர்வீஸ் சார்ஜ்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி (சரக்கு மற்றும் சேவை வரி) விதிக்க கவுன்சில் பரிசீலிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. வரும் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பேமெண்ட் அக்ரெகேட்டர்கள் என்று அழைக்கப்படும் ஏர்டெல் பே, 1பே, அமேசான் பே, சிசி அவின்யூ, டிஜிகோ, ஜொமேட்டோ, டாடா பிளே உள்பட பல்வேறு ‘பேமெண்ட் கேட்வே நிறுவனங்கள்’ வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆன்லைன் கட்டணங்களை ஏற்றுக் கொள்ளும் வணிகத்தை செய்கின்றன. இவற்றுக்கு அந்நிறுவனங்கள் வசூலிக்கும் 1.5 முதல் 2 சதவீதம் சர்வீஸ் சார்ஜ்களுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாம். எனவே இந்த நிறுவனங்கள் ஒன்றிய மற்றும் மாநில வருவாய் அதிகாரிகளை உள்ளடக்கிய ஜிஎஸ்டி பொருத்துதல் குழுவின் கூட்டத்திற்கு பிறகு புதிய வரியை எதிர்கொள்ளக்கூடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
எனினும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சிலின் 54வது கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. 2,000-க்கு மேல் மேற்கொள்ளும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு 18 சதவீதம் வரி விதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் முடிவெடுத்தால் தினசரி குறைந்த மதிப்புள்ள டிஜிட்டல் பரிவர்த்தனைகளை கையாளும் சிறிய வணிகர்கள் எதிர்மறையாக பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது.
தற்போது,க்யூஆர் குறியீடுகள், பிஓஎஸ் மெஷின்கள் மற்றும் நெட் பேங்கிங் போன்ற பல்வேறு டிஜிட்டல் பேமெண்ட்டுகளைக் கையாள்வதால், ரூ.2,000-க்கும் குறைவான பரிவர்த்தனைகளுக்கு, பேமெண்ட் கேட்வே நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன. கடந்த 2016-ம் ஆண்டு ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு ரூ.2,000-க்கு கீழ் உள்ள பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.