சட்டீஸ்கரில் தடம் புரண்ட சரக்கு ரயில்.. வெளியான அதிர்ச்சி தகவல்

 

சட்டீஸ்கரில் சரக்கு ரயில் விபத்துக்குள்ளானதில் அதன் 9 பெட்டிகள் தடம் புரண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாகா நகர் ரயில் நிலையம் அருகே கடந்த ஜூன் 2ம் தேதி கோரமண்டல் மற்றும் சாலிமர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் மோதிய விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 295க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 1,000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்திற்கு, ‘சிக்னலிங்-சர்க்யூட்-மாற்றம்’ நிகழ்வின் போது, தவறான சிக்னல்கள் அளிக்கப்பட்டதே காரணம் என ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். 295 பேரின் உயிரிழப்புக்குக் காரணமான பாலசோர் ரயில் விபத்து குறித்து, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தனது விசாரணையை முடித்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், சட்டீஸ்கர் மாநிலம் ஜான்ஜ்கிர் – சம்பா மாவட்ட எல்லைக்கு உட்பட்ட அகல்தாரா அருகே, பிலாஸ்பூரில் இருந்து ராய்கர் நோக்கி சென்ற சரக்கு ரயிலின் சில பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. பிலாஸ்பூர் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்தனர்.

இந்த விபத்தால் பிலாஸ்பூர் - ராய்கர் வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் இயக்கம் முற்றிலும் ஸ்தம்பித்தது. நிலக்கரி ஏற்றிச் செல்லும் மற்ற ரயில்களின் போக்குவரத்தும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. தகவல் அறிந்து வந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் ரயில் பாதையை சீரமைத்தனர்.


இதுகுறித்து ரயில்வே அதிகாரி சந்தோஷ் குமார் கூறுகையில், ‘அகல்தாரா கிழக்கு கேபின் அருகே சரக்கு ரயில் வந்தவுடன், அந்த ரயிலின் 9 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன. இந்த ரயில் விபத்து காரணமாக 13 ரயில்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதனால் இந்த ரயில்கள் அனைத்தும் பல்வேறு நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டது. ரயில் பாதையை சீரமைத்த பின்னர் ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருகிறது’ என்றார்.