பொதுமக்களுக்கு நற்செய்தி.. விரைவில் சிலிண்டர் விலை குறையப் போகுது..!

 

இந்தியாவில் விரைவில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை பெரிய அளவில் குறையப் போவதாக ஒன்றிய அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி அமைக்கும் நடைமுறையையும், எரிவாயு சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மாற்றியமைக்கும் நடைமுறையும் பின்பற்றப்படுகிறது.

இந்த நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க ஒன்றிய அரசு உறுதிபூண்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார். இது எரிவாயு சிலிண்டர் பயன்படுத்துவோருக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பொதுமக்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் முயற்சியாக சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார். தேசிய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

வீட்டு உபயோகத்திற்கான சமையல் சிலிண்டருக்கு ஒன்றிய அரசு ஏற்கனவே ரூ. 200 மானியம் வழங்கியது. கொரோனா பாதிப்பின் போதும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது. மூன்று இலவச சிலிண்டர்களை வழங்கியதன் மூலம், நலிவடைந்த பிரிவினருக்கு குறிப்பாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு அரசு உதவுவதாக அவர் விளக்கினார்.

கொரோனா பாதிப்பின் போது ஏழை குடும்பங்களுக்கு 3 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன என்பதை அவர் நினைவு கூர்ந்தார். இதனால் சிலிண்டர்களின் பயன்பாடும் அதிகரித்துள்ளது. இலவச சிலிண்டர்கள் நலிவடைந்த பிரிவினருக்கு நிவாரணம் அளித்துள்ளது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

கடந்த ஆட்சியில் கச்சா எண்ணெய்யாக செலவுகள் இன்னும் நிறைய பாக்கி இருப்பதாகவும், அது தற்போதைய அரசுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த பாக்கியை அரசாங்கம் இன்னும் திருப்பிச் செலுத்துகிறது என்று அவர் கூறினார்.

கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி எண்ணெய் விற்பனை நிறுவனங்களால் ரூ.100 உயர்த்தப்பட்ட 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இப்போது சிலிண்டர் விலை ரூ.1,680 ஆக உள்ளது. இருப்பினும், வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை நிலையானதாகவே உள்ளது.