செல்போன் வெளிச்சத்தில் பிரசவம்.. தாயும், சேயும் உயிரிழந்த சோகம்!

 

மகாராஷ்டிராவில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சிசேரியன் பிரசவம் பார்த்தபோது, தாயும், குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மிகவும் பணக்கார முனிசிபல் கார்ப்பரேசனாக விளங்குவது பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேசன். ஏனெனில், இந்த ஒரு முனிசிபல் கார்ப்பரேசனின் ஆண்டு பட்ஜெட் ஒதுக்கீடு என்பது, ஒரு மாநிலங்களின் பட்ஜெட் ஒதுக்கீட்டை விட அதிகமானது. அந்த அளவுக்கு வசதியான பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேசன் நடத்தும் மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மும்பையைச் சேர்ந்தவர் மாற்றுத் திறனாளியான குசுருதீன் அன்சாரி. இவரது 26 வயது மனைவி சஹிதுன், 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த திங்கட்கிழமையன்று அவர் மும்பையில் உள்ள பிரிஹன் மும்பை மாநகராட்சி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பிரசவ வலி ஏற்படாததால், அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். இது தொடர்பாக அவரது குடும்பத்தினரிடமும் அவர்கள் அனுமதி பெற்று இருந்தனர்.

இதையடுத்து, சிசேரியன் செய்து கொண்டிருந்தபோது, திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அப்போது, மருத்துவமனையில் இருந்த ஜெனரேட்டரும் இயங்கவில்லை என்பதால், செல்போன் டார்ச் வெளிச்சத்திலேயே சிசேரியன் பிரசவம் செய்தனர். ஆனால், கர்ப்பிணியும், அவர் பெற்றெடுத்த குழந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தது, அவர்கள் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள், கர்ப்பிணி பெண் சஹிதுன் உடல் நிலை மிகவும் நன்றாக இருப்பதாக, உடல் பரிசோதனை செய்த மருத்துவர்களே தெரிவித்ததாகவும், 3 மணி நேரம் மின்சாரம் தடைபட்டதே இருவரின் உயிரிழப்புக்கு காரணம் என்றும் குற்றஞ்சாட்டினர். அதுமட்டுமின்றி, ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாததும் காரணம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தாய், சேய் உயிரிழப்புக்கான காரணம் குறித்த விசாரணைக்கு பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேசன் உத்தரவிட்டுள்ளது.