தலையில் கல்லைப்போட்டு நண்பரை கொலை செய்த நண்பர்கள்.. நைட் பார்ட்டியில் நடந்த பயங்கரம்!

 

கர்நாடகாவில் குடிபோதையில் திட்டியதால் நண்பன் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாக கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூரு சிவாஜி நகரைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் திருவிழாவைக் காண மைசூரில் உள்ள தொம்மாளூருக்கு கடந்த 18-ம் தேதி வந்திருந்தார். அங்கு பழைய நண்பர்கள் சந்தித்து பேசியுள்ளனர். அவருடைய பழைய நண்பர்கள் பூங்காவில் பார்ட்டி நடத்தியுள்ளார். இந்த பார்ட்டியில் அனைவரும் மது குடித்ததாக கூறப்படுகிறது.

அப்போது சதீஷ்க்கு போதை அதிமாகியுள்ளது. அதனால், குடிபோதையில் கட்டுப்பாட்டை இழந்த சதீஷ், தன்னுடன் இருந்த சந்தோஷ் மற்றும் பவன் ஆகியோரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அத்துடன் குடிபோதையில் அவர்களை கீழே தள்ளி தகராறு செய்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் கைகலப்பும் ஏற்பட்டது.

அப்போது சதீஷ் தலையில் சிமென்ட் கல்லை எடுத்து அவர்கள் போட்டுள்ளனர். இதில் படுகாயமடைந்த சதீஷ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் சந்தோஷ், பவன் உள்பட அவரது நண்பர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஹலசூர் போலீசார், சதீஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் சதீஷ் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து தனிப்படை அமைத்து சதீஷை கொலை செய்தவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், பதுங்கியிருந்த பவன், சந்தோஷ், ரஞ்சித், ரங்கநாத், வினோத் ஆகியோரை ஹலசூர் போலீசார் நேற்று மாலை கைது செய்தனர். இக்கொலை தொடர்பாக போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.