அடுத்த 3 மாதங்களுக்கு இலவசம்... உங்க ஆதார் அட்டை விவரங்களை புதுப்பிக்கலாம்.. ஒன்றிய அரசு அறிவிப்பு

 

ஆதார் அட்டை விவரங்களை இணையதளத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக புதுப்பிக்கலாம் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

ஆதார் என்பது ஒவ்வொரு தனி நபரின் தனித்துவமான அடையாளத்தை நிறுவும் நோக்கத்திற்காக இந்திய அரசாங்கத்தின் சார்பாக இந்திய தனித்துவ அடையாள ஆணையம்  தனிநபர்களுக்கு வழங்கிய தனிப்பட்ட அடையாள எண். இது இந்தியாவில் எங்கும் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக செயல்படும்.

இந்த நிலையில் அடுத்த மூன்று மாதங்களுக்கு ஆதார் அட்டை விவரங்களை இணைய தளம் மூலம் இலவசமாக புதுப்பிக்கலாம் என்று  இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India (UIDAI) தெரிவித்துள்ளது. குறிப்பாக, 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்று  இதுவரையில் புதுப்பிக்காதவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

பொதுவாக, ஆதார் மையங்களில் நேரடியாக சென்று புதுபித்தால் வழக்கம்போல் ரூ.50/- கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால், தற்போது, இந்த சேவையை  மார்ச் 15 முதல் ஜூன் 14, 2023 வரை  இலவச சேவையாக கிடைக்க ஆணையம் முடிவெடுத்துள்ளது.  இந்த சேவையை மைஆதார் ‘my Aadhaar’ எனும் இணையத்தில் மட்டுமே இலவசமாகப் பெற முடியும்.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் லட்சக்கணக்கான மக்கள் பயனடையும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பயனாளர்கள் https://myaadhaar.uidai.gov.in/ எனும் இணையத்தில் தங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி தங்களின் தரவுகளை புதுப்பித்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

பொது மக்கள், தங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி https://myaadhaar.uidai.gov.in/ இல் உள்நுழைய வேண்டும் . பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு முறை கடவுச்சொல் (OTP) அனுப்பப்படும். அதன் பிறகு, 'Document Update' என்ற வாசகத்தை கிளிக் செய்து ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள   விவரங்களை பார்த்துக் கொள்ளலாம். அதன்பிறகு, ஏற்றுக்கொள்ளப்பட்ட முகவரி மற்றும் அடையாள ஆவணங்களின் நகல்களை பதிவேற்றம் செய்து தங்கள் ஆதாரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம்.