தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதி!
தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிந்து தனி தெலுங்கானா உருவானது. ஆனால், மாநிலம் உதயமானது முதற்கொண்டு, பி.ஆர்.எஸ் கட்சியின் சந்திரசேகர ராவ் 2 முறை முதல்வராக பதவி வகித்தார். இதனை தொடர்ந்து தெலங்கானாவின் 3-வது சட்டப்பேரவை தேர்தல் கடந்த நவம்பர் மாதம் 30-ம் தேதி நடைபெற்றது. 119 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, பிஆர்எஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவியது.
இந்நிலையில் இத்தேர்தலில், காங்கிரஸ் 64 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் கட்சி 39 தொகுதிகளிலும், எம்.ஐ.எம் கட்சி 7 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சியின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் தான் போட்டியிட்ட ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ரேவந்த் ரெட்டி நேற்று முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், சந்திரசேகர் ராவ் தனது பண்ணை வீட்டில் வழுக்கி விழுந்ததாக ஐதராபாத்தில் உள்ள யசோதா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கிழே விழுந்ததில் இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், அறுவை சிகிச்சை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.