முன்னாள் எம்.பி. ஆதிக் அகமது மகன் ஆசாத் என்கவுன்டர்.. உத்தர பிரதேசத்தில் பரபரப்பு!!

 

உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் எம்.பி ஆதிக் அகமதுவின் மகன் ஆசாத் உள்ளிட்ட இரண்டு பேரைக் போலீசார் சுட்டுக் கொன்றனர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டில் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்எல்ஏ ராஜூ பால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் சாட்சியாக இருந்த வழக்கறிஞரான உமேஷ் பால், பிரயாக்ராஜில் உள்ள இல்லத்தில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் முன்னாள் எம்.பி.யும், முன்னாள் ரவுடியுமான ஆதிக் அகமது உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் ஆதிக் அகமது ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், அவரது மகன் ஆசாத், கூட்டாளி குலாம் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். ஆசாத், குலாம் ஆகியோர் குறித்து துப்பு கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என காவல்துறை அறிவித்திருந்தது.  

இந்நிலையில், ஆதிக் அகமதுவின் மகன் ஆசாத் மற்றும் அவரது கூட்டாளி குலாம் ஆகியோர் இன்று போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஜான்சியில் அவர்களை மாநில அதிரடிப்படை போலீசார் பிடிக்க முயன்றபோது ஏற்பட்ட சண்டையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். குற்றவாளிகளிடம் இருந்து வெளிநாட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக சட்டம் ஒழுங்கு பிரிவு சிறப்பு டிஜிபி தெரிவித்தார்.

உமேஷ் பால் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்ட வழக்கில் ஆதிக் அகமது மற்றும் அவரது கூட்டாளிகள் கான் சவுலத், தினேஷ் பாசி ஆகியோருக்கு சமீபத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.