பனிச்சரிவில் சிக்கி வெளிநாட்டு பயணி பலி.. மற்றொருவர் மாயம்.. ஜம்மு காஷ்மீரில் சோகம்!
ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவு ஏற்பட்டதில் வெளிநாட்டு பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் தற்போது சீசன் தொடங்கி உள்ள நிலையில், கட்டுக்கடங்காத வகையில் இந்த வருடம் பனிப் பொழிவு காணப்படுகிறது. காணும் இடம் எல்லாம் வெள்ளைப் போர்வை கொண்டு போர்த்தியது போல் பனி சூழ்ந்து காட்சி அளிக்கிறது. மேலும் ரம்மியமான சூழல் ஜம்மு காஷ்மீரில் நிலவுவதால் உள்நாடு மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளின் காஷ்மீர் வருகை அதிகரித்து உள்ளது.
இந்நிலையில், குல்மார்க்கின் கொங்டூரில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு ரஷ்யாவை சேர்ந்த பயணி உயிரிழந்தார். மற்றொருவரை காணவில்லை. மேலும், ஒருவர் படுகாயங்களுடன் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) தெரிவித்துள்ளது. ராணுவத்தினரும், ஜம்மு காஷ்மீர் ரோந்துக் குழுவினரும் மீட்பு மற்றும் தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீர் பேரிடர் மேலாண்மை ஆணையம், யூனியன் பிரதேசத்தின் 10 மாவட்டங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கையை நேற்று வெளியிட்டது. அனந்த்நாக், குல்காம் மாவட்டங்களுக்கு குறைந்த ஆபத்து பனிச்சரிவு எச்சரிக்கையும், பந்திபோரா, பாரமுல்லா மாவட்டங்களுக்கு நடுத்தர அளவிலான பனிச்சரிவு எச்சரிக்கையும் அடுத்த 24 மணி நேரத்துக்கு விடுக்கப்பட்டிருந்தது.