சட்டமன்ற வரலாற்றில் முதல் முறை... நாகாலாந்தின் முதல் பெண் எம்எல்ஏ!!

 

நாகாலாந்தில் முதல்முறையாக பெண் ஒருவர் எம்எல்ஏவாக தேர்வாகி வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளார்.

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் சட்டமன்றத்திற்கான தேர்தல் கடந்த மாதம் 27-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் 85.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இந்த சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. 

இதில், ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி - பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க இருக்கிறது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் இந்த கூட்டணி 39 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இந்தக் கூட்டணியின் சார்பில் தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி வேட்பாளராக திமாபூர்-3 தொகுதியில் களமிறக்கப்பட்ட பெண் வேட்பாளரான ஹெகானி ஜக்காலு வெற்றி பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். 

இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்)-யின் வேட்பாளர் அஜெட்டோ ஜிமோமியைவிட 1,536 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், நாகாலாந்தின் முதல் பெண் வேட்பாளர் என்ற பெயரை பெற்றுள்ளார். 1963-ம் ஆண்டு நாகாலாந்து மாநிலம் உருவானதில் இருந்து இதுவரை 13 சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், ஒருமுறை கூட பெண் ஒருவர் வெற்றி பெற்று எம்எல்ஏவாக சட்டப்பேரவைக்குள் நுழைந்ததில்லை. 

48 வயதாகும் ஹெகானி ஜக்காலு அமெரிக்காவில் சட்டம் பயின்றவர். சமூக தொழில்முனைவோராக அறியப்படுபவர். யூத்நெட் என்ற லாப நோக்கமற்ற தொண்டு நிறுவனத்தை கடந்த 20 ஆண்டுகளாக நடத்தி வரும் இவர், இதன்மூலம் இளைஞர்களுக்கு கல்வியும், திறன் மேம்பாடும் அளித்து வருகிறார். 2018-ம் ஆண்டில் இவருக்கு நாட்டின் பெண்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான நாரி சக்தி விருது வழங்கப்பட்டது. வடகிழக்கு மாநிலத்தில் இருந்து இந்த விருதை பெற்ற முதல் நபர் இவர்.