மிக்ஜாம் புயலால் வெள்ள பாதிப்பு.. தமிழ்நாட்டிற்கு முதல் கட்டமாக ரூ. 450 கோடி ஒதுக்கியது ஒன்றிய அரசு!

 
புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாட்டிற்கு முதல் கட்டமாக ரூ.450 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது.

மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. 36 மணி நேரம் இடைவிடாது கொட்டிய கனமழையால் சென்னை மாநகரமே தத்தளித்தது. தற்போது மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால், சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் வடிந்துள்ளது. எனினும், புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

பல இடங்களில் குடிநீர், உணவு, மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததாலும், மழைநீருடன் கழிவு நீரும் கலந்து வருவதால், தாங்களாகவே மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனிடையே சென்னை உட்பட 4 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்பு மற்றும் மழை வெள்ள சேதங்களை சீரமைக்க ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது. 

இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியிருந்ததோடு, பிரதமர் மோடி உள்ளிட்டோரிடமும் வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில், புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாட்டிற்கு முதல் கட்டமாக ரூ.450 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த தகவலை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.450 கோடியை முன்கூட்டியே ஒதுக்கீடு செய்து இருப்பதாக அமித்ஷா கூறியுள்ளார்.