பனிமூட்டத்தால் விமானம் தாமதம்.. கோபத்தில் விமானியை தாக்கிய பயணி.. பகீர் வீடியோ!
விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிப்பை வெளியிட்டுக் கொண்டிருந்த விமானியை பயணி தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வட இந்தியாவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. குறிப்பாக டெல்லியில் வழகத்தைவிட அதிகமாக பனிமூட்டம் இருப்பதால் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுவது மற்றும் தரையிறக்குவதில் சிரமம் உள்ளது. விமானங்கள் சில மணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன. அதேபோல், டெல்லிக்கு வரும் விமானங்களும் தாமதம் ஆகிறது.
இந்த நிலையில், டெல்லியில் இருந்து கோவாவுக்கு புறப்பட இருந்த இண்டிகோ விமானம் பனிமூட்டம் காரணமாக தாமதம் ஆனது. பல மணி நேரம் விமானம் தாமதம் ஆனதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதற்கிடையே, விமானம் தாமதமானது குறித்த அறிவிப்பை பயணிகளுக்கு விமானி வெளியிட்டுக் கொண்டு இருந்தார்.
அப்போது விமானத்தின் கடைசி இருக்கையில் இருந்த பயணி ஒருவர் வேகமாக வந்து விமானம் தாமதமாகிவிட்டது எனக் கூறிக்கொண்டு இருந்த விமானியை சரமாரியாக தாக்கினார். இதைப் பார்த்து பயணிகளும் விமான பணியாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக விமானியை தாக்கிய பயணி விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டார். விமானி தாக்கப்பட்ட சம்பவம் குறித்து இண்டிகோ விமான நிறுவனம் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.