மீனவர்கள் 10-ம் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்.. எச்சரிக்கை விடுத்த புதுச்சேரி மீன்வளத்துறை!

 

புதுச்சேரியில் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்ற காரணத்தினால் மீனவர்கள் நாளை முதல் 10-ம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 6-ம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும். இதன் காரணமாக அப்பகுதிகளில் 7-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது 8-ம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.

இதன் காரணமாக, நாளை (மே 7) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மே 8-ம் தேதி இரவிலிருந்து மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

காற்றின் வேகம் மேலும் உயர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மே 10-ம் தேதி முதல் மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஏற்கனவே புதுச்சேரி பிராந்திய கடல்நீர் பகுதிகளில் பாரம்பரிய மீன்பிடி படகுகள் தவிர, ஏனைய மீன்பிடி படகுகளுக்கு 61 நாட்கள் மீன்பிடிக்கத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் பாரம்பரிய மீன்பிடி படகுகள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.