மணிப்பூர் வாக்குச்சாவடியில் துப்பாக்கிச் சூடு.. அலறியடித்து ஓடிய வாக்காளர்கள்.. பரபரப்பு வீடியோ!

 

மணிப்பூரில் வாக்குச்சாவடி அருகே மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

18-வது நாடாளுமன்ற தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. இந்நிலையில், மணிப்பூரில் உள்ள உள் மணிப்பூர் மற்றும் வெளி மணிப்பூர் ஆகிய 2 தொகுதிகளில் உள்ளன.

இதில் உள் மணிப்பூர் தொகுதியில் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இதைப்போல வெளி மணிப்பூர் தொகுதியில் 15 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதியில் மீதமுள்ள 13 சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 2-வது கட்ட தேர்தல் நடைபெறும் வருகிற 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மாநிலத்தின் மொய்ராங் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தமன்போக்பியில் உள்ள வாக்குச் சாவடி அருகே இன்று மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. துப்பாக்கிச் சூடு சத்தத்தை கேட்டு, வாக்குச்சாவடியில் இருந்து மக்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.