அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ.. உயிர் தப்ப குளியலறையில் ஒளிந்த 2 சிறுமிகள் மூச்சுத்திணறி பலி!

 

டெல்லியில் குடியிருப்பு ஒன்றில் எழுந்த நெருப்பிலிருந்து தப்பிக்க குளியலறையில் சென்று ஒளிந்த 2 சிறுமிகள், புகைமண்டலத்தால் மூச்சுத் திணறி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு டெல்லியின் சதர் பஜார் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்த குடியிருப்பில் பிற்பகல் 2.10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு அழைப்பு வந்தது. தகவலின் பேரில் 4 தீயணைப்பு வாகனங்கள் சதர் பஜார் சமேலியன் சாலையில் உள்ள விபத்து நிகழ்விடத்துக்கு விரைந்தன.

குடியிருப்பு முழுக்கவும் தீப்பற்றியிருந்ததில், தீயணைப்பு வீரர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து தீயை அணைக்க முயன்றனர். தீ ஓரளவு கட்டுக்குள் வந்த பிறகே கட்டிடத்தில் சிக்கியிருந்தவர்களை போராடி மீட்க முடிந்தது. மேலும் சிலர் உள்ளே சிக்கியிருக்கலாம் என்று கிடைத்த தகவலை அடுத்து, ஆக்சிஜன் முகமூடிகள் சகிதம், தீயணைப்பு மீட்பு குழுவினர் எரியும் கட்டிடத்துக்குள் புகுந்தனர்.

குடியிருப்பின் ஒவ்வொரு அறையாக திறந்து சோதனையிட்டதில், முதல் தளத்தின் குளியலறை ஒன்றில் 2 சிறுமிகள் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டனர். உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியால் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கே 2 சிறுமிகளையும் பரிசோதித்த மருத்துவர்கள், அவர்கள் மூச்சுத்திணறல் காரணமாக இறந்திருப்பதை உறுதி செய்தனர்.

வீடு முழுக்க பற்றி எரிந்ததில், உயிர் தப்பும் நோக்கில் குளியலைறையில் சென்று இரு சிறுமிகளும் ஒளிந்து கொண்டுள்ளனர். இதன் மூலம் நெருப்பிலிருந்து அவர்கள் தங்களை தற்காத்துக்கொண்ட போதிலும், சுற்றிச்சூழ்ந்த புகை மண்டலத்தால் சுவாசிக்க வழியின்றி மயங்கி விழுந்துள்ளனர்.

போலீசார் விசாரணையில் இறந்த சிறுமிகளின் பெயர்கள் குலாஷ்னா (14) மற்றும் அனயா(12) எனத் தெரிய வந்துள்ளது. துணை போலீஸ் கமிஷனர் மனோஜ் குமார் மீனா தலைமையில் போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்தும், இறந்தவர்களின் பின்னணி குறித்தும் மேலும் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.