மருந்து கம்பெனி ஆலையில் திடீர் தீ விபத்து.. பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
மகாராஷ்டிராவில் உள்ள மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் மகத் பகுதியில் ப்ளூ ஜெட் ஹெல்த்கேர் லிமிடெட் என்ற மருந்து நிறுவமனம் அமைத்துள்ளது. இந்த கம்பெனி வளாகத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. தீப்பிடித்த கட்டிடத்திற்குள் ஊழியர்கள் பலர் சிக்கிக்கொண்டனர். இதுகுறித்து தீயணைப்பு மீட்பு படை மற்றும் உள்ளூர் காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பேரில் தீயணைப்பு படையினர், போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை நிலவரப்படி தீ விபத்தில் சிக்கிய 4 ஊழியர்கள் சடலமாக மீட்கப்பட்டதாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தெரிவித்தனர். இன்று காலை மேலும் 3 ஊழியர்களின் உடல்களை மீட்டனர். இதனால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.