எலக்ட்ரிக் பைக் ஷோருமில் தீ விபத்து.. பெண் ஊழியர் பரிதாப பலி.. அதிர்ச்சி வீடியோ
கர்நாடகாவில் மின்சார பைக் ஷோ ரூம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரின் வடக்குப் பகுதியில் உள்ள நவ்ரங் பார் ஜங்க்ஷனில் பிரபல மின்சார வாகனத்தின் ஷோரூம் உள்ளது. நகரின் முக்கியமான பகுதிகளில் ஒன்றான இடம் என்பதால் எப்போதும் பரபரப்பாக இந்த இடம் காட்சி அளிக்கும். நேற்று மாலை 5.30 மணியளவில் வழக்கம் போல ஷோ ரூமில் ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை வெளியேறியது. தீ பிடித்ததும் அலறியடித்துக்கொண்டு ஊழியர்கள் ஷோ ரூமை விட்டு வெளியேறினர். உடனடியாக தீ அணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீ அணைப்பு படையினர், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீயை கட்டுக்குள் கொண்டு வந்த பிறகு ஷோ ரூமிற்குள் தீ அணைப்பு வீரர்கள் சென்று பார்த்தனர். அப்போது தீ விபத்தில் சிக்கி இளம்பெண் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண் பிரியா (20) என்பதும், ஷோ ரூமில் ஊழியராக பணியாற்றியதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தீ விபத்தில் ஷோ ரூமில் இருந்த 50 எலக்ட்ரிக் பைக்குகள் தீயில் கருகி நாசமாகின.