16 வயது சிறுமியை ஆற்றில் தூக்கி வீசிய தந்தை.. ஆண் நண்பருடன் பேசியதால் ஆத்திரம்!

 

உத்தர பிரதேசத்தில் 16 வயது சிறுமியை அவரது குடும்பத்தினர் யமுனை ஆற்றில் தூக்கி வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தர பிரதேச மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி தனது ஆண் நண்பருடன் பேசி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை திட்டி இருக்கிறார். அத்துடன் சிறுமிக்கு திருமணம் செய்து வைக்கவும் முயற்சி செய்துள்ளார். திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரை கொலை செய்யும் அளவுக்கு துணிந்துள்ளார்.

சம்பவத்தன்று குருகிராம் போகலாம் என மகளை பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். ஆக்ரா அருகே யமுனை ஆற்றில் உள்ள மிதவைப் பாலத்தில் வந்தபோது அவருடன் உறவினர் ஒருவரும் வந்துள்ளார். இருவரும் சேர்ந்து சிறுமியின் கழுத்தை துணியால் நெரித்துள்ளனர். பின்னர் ஆற்றில் தூக்கி வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

தண்ணீரில் தத்தளித்த சிறுமியின் கூக்குரல் கேட்டு ஆற்றங்கரையை ஒட்டியுள்ள கிராமத்தினர் அங்கு வந்து நீர்மூழ்கி வீரர்களை உதவிக்கு அழைத்தனர். அவர்கள் ஆற்றில் குதித்து சிறுமியை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.

நடந்த சம்பவங்களை குழந்தைகள் நல அதிகாரிகளிடம் சிறுமி தெரிவித்துள்ளார். மேலும் அவர் அளித்த புகாரின் பேரில் அவரது தந்தை மற்றும் உறவினர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமி அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.