மாற்று சமூக இளைஞரை காதலித்த மகளை கொன்ற கொடூர தந்தை.. மத்திய பிரதேசத்தில் பயங்கரம்

 

மத்திய பிரதேசத்தில் மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்த மகளை தந்தை கொடூரமாக கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ண பிரஜாபதி. இவரது மகள் சஞ்சனா (19). இதனிடையே, சஞ்சனா அதேபகுதியை சேர்ந்த மாற்று சமூக இளைஞரான நரேந்திர ஜதேவை காதலித்துள்ளார். இவர்களின் காதலுக்கு சஞ்சனாவின் தந்தை பிரஜாபதி மற்றும் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நரேந்திர ஜதேவை காதலிப்பதை நிறுத்திக்கொள்ளும்படி நேற்று சஞ்சனாவிடம் தந்தை பிரஜாபதி கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் மகள் சஞ்சனாவை பிரஜாபதி கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளார். 

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த சஞ்சனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததால் மகளை கொலை செய்த பிரஜாபதியை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.