உச்சநீதிமன்றத்தில் போலி மனுக்கள்? சிக்குவார்களா அதிமுக தவெக நிர்வாகிகள்?

 

கரூர் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்று இருவர் பேரில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணை மீது நம்பிக்கை இல்லை என்றும் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு தாக்கல் செய்த பன்னீர்செல்வம் என்பவர், உயிரிழந்த சிறுவனின் தாயாரை பல ஆண்டுகளுக்கு முன்னரே விட்டுச் சென்று மைனர் பெண் ஒருவரை திருமணம் செய்து அதுவும் சிக்கலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஒற்றைத் தாயாக சிறுவனை பராமரித்து வந்த ஷர்மிளா என்ற பெண் தனக்கும் பன்னீர்செல்வத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. கணவனால் கைவிடப்பட்ட பெண் என்ற அடிப்படையில் அரசு உதவி பெற்று வருகிறேன். இந்த மனுவுக்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறியுள்ளார்.

இதே போல் மனைவி உயிரிழந்த நிலையில் கணவர் செல்வராஜ் பெயரில் உச்சநீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவரும் தான் எந்த மனுவையும் தாக்கல் செய்யவில்லை, தன்னுடைய மகனுக்கு வேலை வாங்கித் தருவதாகத் தான் மனுவில் கையெழுத்து வாங்கினார் அதிமுக காரர் என்று கூறியுள்ளார்.

இந்த இருவரும் செய்தியாளர்களிடம் உண்மையை சொன்ன நிலையில், இது  உச்சநீதிமன்றத்தையே ஏமாற்றிய விவகாரம் என்று புதிய சர்ச்சை வெடித்துள்ளது. நவம்பர் 14ம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்ட நிலையில், இந்த விவகாரமும் அரசு தரப்பில் எடுத்து வைக்கப்படும் என்று தெரிகிறது. உச்சநீதிமன்றத்தில் இந்த விவகாரம் பெரிதாக வெடிக்கும்.

போலியாக மனு தாக்கல் செய்தவர்கள் மீது உச்சநீதிமன்றம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.